தனிமை கடந்து

காப்கா தன் தந்தைக்கு எழுதிய கடிதம் மற்றும் நாடின் கோடிமர் எழுதிய தந்தை காப்காவிற்கு எழுதிய கடிதம் இரண்டையும் ஒரு சேர நேற்றிரவு படித்து முடித்தேன். அப்பாவிற்கும் மகனுக்குமான பிணக்கும் சண்டைகளும் காலம் காலமாக தொடரக்கூடியவை. அப்பாவின் கெடுபிடிகள் தன் விருப்பத்தினை அழுத்தி தன்வாழ்க்கையை அர்த்தமற்றதாக்கிவிட்டது என்று குற்றம் சாட்டுகிறான் காப்கா. அப்பாவோடு பெண்களுக்கு உள்ள உறவு பையன்களுக்கு இருப்பதில்லை.

ஷெல் சில்வர்ஸ்டைன் என்ற அமெரிக்க கவி முதுமை பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறார். ஒரு சிறுவனும் அவனது தாத்தாவும் பேசுவது போன்றது அக்கவிதை.சிறுவன் தான் படுக்கையில் சில நேரம் மூத்திரம் போய்விடுவதாக சொல்வான். தாத்தா தானும் கூட அப்படி தான் என்பார். சிறுவன் சாப்பிடும் போது சில வேளை தன் கையில் உள்ள ஸ்பூன்களைதவறவிட்டுவிடுவேன் என்கிறான்.

�தாத்தா தானும் அப்படிதான் என்கிறார். சிறுவன் தான் காரணமில்லாம் அழுவேன் என்கிறான். தாத்தா தானும் அப்படியே என்று தலையசைக்கிறார். முடிவாக சிறுவன் சொல்கிறான் பெரியவர்கள் என்னை கவனிப்பதேயில்லை . தாத்தா அதை என்னால் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. நானும் அப்படியே நினைக்கிறேன் என்கிறார்

இந்த கவிதை மிக எளிமையான தோன்றினாலும் ஆழமான வலி கொண்டதாக இருக்கிறது.

இந்த தீராப்பிரச்சனை பற்றி யோசித்தபோது மறுபடியும் ஷாங் இமுவின் தனிமையாக கடந்து சென்ற ஆயிரம் மைல்கள் படத்தை காணலாம் என்று தோன்றியது. உடனே அந்த படத்தை எடுத்து பார்க்க துவங்கினேன்.

ஷாங் இமுவின் Riding alone for thousands of miles. திரைப்படம் ஒரு மனிதனின் சாவு இன்னொரு மனிதனின்அகத்தேடுதலை எப்படி வழிநடத்துகிறது என்பதை முன்னிறுத்துகிறது. மிக முக்கியமான சமகால திரைப்படமிது. சீனாவை சேர்ந்த ஷாங் இமு சமகால உலக சினிமாவின் தலை சிறந்த இயக்குனர்.

கோசி தஹதா ஒரு வயதான ஜப்பானியர். அவரது மகன் கெஞ்சி புற்றுநோய் பாதித்து மரணமடையும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கிறான். சிறுவயதில் இருந்தே அப்பாவை விட்டு விலகியே இருக்கிறான் கெஞ்சி. எதனால் அவனுக்கு தன் மீது இத்தனை கோபம் வெறுப்பு என்று அவருக்கு புரிந்து கொள்ளமுடியவில்லை.

வீட்டை விட்டு வெளியேறி போய் பல காலமான கெஞ்சியை சாவின் விளம்பிலாவது பார்த்து பேச வேண்டும் என்று மருத்துவமனைக்கு வருகிறார். அவனோ அப்பாவை பார்க்க விரும்பவில்லை என்று துரத்திவிடுகிறான். மனம் உடைந்து வீடு திரும்புகிறார். சில நாட்களில் கெஞ்சி இறந்து போன செய்தி வருகிறது. அத்துடன் அவன் இவ்வளவு நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தான் என்பதை பற்றிய ஒரு வீடியோ ஒன்றும் தபாலில் வந்து சேர்கிறது.

சீனாவின் நாட்டுப்புறகலைகளில் ஒன்றான ஒபரா பற்றி தன் மகன் ஆராய்ச்சி செய்ததையும் லியா ஜியாமின் என்ற நாட்டுப்புற பாடகனை பற்றிய டாகுமெண்டரி திரைப்படத்தை எடுக்க விரும்பியதை அறிந்து கொள்கிறார்.

தன் மகனின் நிறைவேறாத அந்த ஆசையை தான் ஏன் செய்து முடிக்க கூடாது என்று முடிவு செய்து தன் சேமிப்பில் உள்ள பணத்தை எடுத்துக் கொண்டு மொழி தெரியாத சீனாவின் கிராமத்தை தேடி பயணம் துவங்குகிறார். மகன் நினைவில் வந்தபடியே இருக்கிறான். சீனாவில் அந்த கிராமியக் கலைஞரை கண்டுபிடிப்பது பெரிய சிரமமாக இருக்கிறது. முடிவில் தான் தேடி வந்த ஜியாமின் தற்போது சிறையில் இருப்பதை கண்டுபிடிக்கிறார். அவரை சந்திக்க அனுமதி வாங்கி சிறைச்சாலைக்கு செல்கிறார்.

ஜியாமின் தான் சிறையில் அடைக்கபட்ட நாளில் இருந்து பாடுவதேயில்லை. எட்டு வயதான தன் மகனை பிரிந்த துக்கத்தில் இருக்கிறேன் அதனால் பாடும் மனநிலை இல்லை என்று அவரை துரத்திவிடுகிறான். சிறை அதிகாரிகளும் அவர் ஜியாமினை படம் எடுப்பதை அனுமதிக்க மறுக்கிறார்கள். சோர்ந்து போய் தன் மகனின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லையே என்று வருந்துகிறார் கோசி.

ஜியாமின் மகனை அழைத்து வந்தால் ஒரு வேளை பாடக்கூடும் என்று நம்பி அவனது கிராமத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கே யாங்யாங் என்ற அந்த எட்டு வயது சிறுவனை சந்திக்கிறார். முறையற்ற உறவில் பிறந்த சிறுவன் என்பதால் யாங்யாங் தந்தையின் அன்பிற்கு ஏங்குகிறான். ஊர்காரர்களிடம் பேசி சமாதானம் செய்து அந்த சிறுவனை தன்னோடு சிறை சாலையில் அப்பாவை காண அழைத்து கொண்டு புறப்படுகிறார். ஊரே கூடி விருந்து தெருகிறது. வீதி முழுவதும் மக்கள் அமர்ந்து ஒன்றாக சந்தோஷத்துடன் சாப்பிடுகிறார்கள். சிறுவனுக்கு சாப்பாடு பிடிக்கவில்லை. ஊரை விட்டு போவதிலும் இஷ்டமில்லை.

அதை அறியாமல் அவனை தன்னோடு அழைத்து கொண்டு நகரம் நோக்கி பயணமாகிறார் கோசி. வழியில் ஒரு பாறை பள்ளதாக்கில் அந்த சிறுவன் காணாமல் போய்விடுகிறான். கைவிளக்கு ஒன்றுடன் அவனை தேடி அலைகிறார். சிறுவன் குகைகளுக்குள் ஒளிந்து ஒளிந்து ஒடுகிறான். இருவரும் வழி தவறி மலைசரிவு ஒன்றினுள் மாட்டிக் கொள்கிறார்கள். வெளியேறும் வழி தெரியவில்லை. இரவில் ஒன்றாக உறங்குகிறார்கள். சிறுவன் அவரோடு நெருக்கமாகிறன்.

முடிவில் மலைக்குகையினுள் வழிதவறிய அவர்களை ஊர் கூடி கண்டுபிடிக்கிறது. அந்த பையனுக்கு அப்பாவை காண விருப்பமில்லை.அவனை கட்டாயப்படுத்தி அழைத்து போக தன்னால் முடியாது என்று அங்கேயே விட்டுபோகிறார். அவ்வளவு போராடி அவர் சென்ற பயணம் தோல்வியில் முடிகிறது. யாவும் வியர்த்தமாகி விடுகிறது. ஆனால் இந்த நிகழ்ச்சிகள் முழுவதையும் தன்னுடைய கேமிராவில் பதிவு செய்து கொள்கிறார்

அப்பாவிற்கும் மகனுக்கும் இடையில் உருவாகும் கோபம் காரணங்களால் விளக்க முடியாதது. அது தன் விஷயத்தில் நடந்தது போல தான் ஜியாமின் மகனுக்கும் நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்கிறார். ஆனாலும் ஒரு தந்தையாக ஜியாமின்னை காண சிறைச்சாலைக்கு போகிறார். தான் எடுத்த புகைப்படங்களை அவனுக்கு காட்டுகிறார்.

பிரிந்த தன்மகனின் புகைப்படங்களை கண்டதும் ஜியாமின் தாரை தாரையாக கண்ணீர்விட்டு அழுகிறான். தன் மகனை நினைத்து அவன் அறியாமல் பாடத் துவங்குகிறான். ஆனால் அதை படமாக்க விருப்பமில்லாமல் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறார்.
முடிவில் ஜியாமின்னிடம் உன்னை போல என்னால் இவ்வளவு வெளிப்படையாக மனத்துயரை வெளிப்படுத்த தெரியவில்லை. நீங்கள் கிராமவாசிகள் எளிதாக உணர்ச்சிகளை காட்டிவிடுகிறீர்கள். என்னால் அப்படி முடியவில்லை. நான் தோற்றுப்போன தகப்பன் என்று உடைந்து சொல்கிறார் கோசி. அந்த நிமிசம் அவர் தன் மகனோடு கொண்ட பிரிவு மறைந்து போவதை உணர்கிறார்.

இந்த மனநெகிழ்வோடு கோசி தஹதா மறுபடியும் ஜப்பான் திரும்புவதோடு படம் முடிவடைகிறது.

அப்பாவிற்கும் மகனுக்குமாக சண்டையும் கோபமும் காரணங்களுக்கு அப்பாற்பட்டது. அது ஒரு ஆறாத காயம். வயதும் அனுபவமும் இந்த காயத்தை ஆற்ற கூடுமோ அன்றி அதன் வடுக்கள் ஒரு போதும் மறைவதேயில்லை.

பிரிந்து போன அப்பாவிற்கும் மகனுக்குமான உறவையும், வயதான காலத்தில் தன் தவற்றை உணரும் அப்பா அதை சரி செய்வதற்காக இறந்த மகனின் ஆசையை நிறைவேற்ற கொள்ளும் முயற்சிகளும் அதன் உண்மையான வலியும் அற்புதமாக படமாக்கபட்டிருக்கிறது.
சீனாவின் மரபுகலை, அதன் இசை, நிலவியல் என்று கவித்துவமாக நகர்கிறது படம். கோசி தஹதாவின் மகன் திரையில் முக்கிய பாத்திரமில்லை. ஆனால் அவன் தான் படத்தின் உந்து சக்தி. சீனப்படம் பார்க்கிறோம் என்பதை மறந்து உள்ளுரில் நான் அறிந்த பல மனிதர்களின் வாழ்க்கை நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தது இப்படம்

ஹாலிவுட்டில் சாகச படங்களை இயக்கிக் கொண்டிருந்த ஷாங் இமு மறுபடியும் தன் கலைப்படங்களை நோக்கி பயணத்தை துவக்கியிருக்கிறார். ஒளிப்பதிவளாராக இருந்து இயக்குனர் ஆனவர் என்பதால் இவர் படங்களில் காட்சிபடுத்துதல் மிக சிறப்பாக இருக்கும்.

சென்ற ஆண்டு இந்த படத்தை சென்னை அண்ணா பல்கலை கழக ஊடக மாணவர்களுக்காக நானே ஒரு முறை திரையிட்டு அதை பற்றி அவர்களுடன் பேசினேன். நேற்றிரவு திரும்ப அதை பார்த்த போது அதன் ஈர்ப்பு அப்படியே இருந்தது. குறிப்பாக தந்தையின் மௌனமும் அவர் அலையும் நாட்களில் அவர் காட்டும் அக்கறையும் அவருக்கு உதவி செய்யும் மனிதர்களும் ஆழ்ந்த மனநெருக்கம் தருவதாக இருந்தது.�
நல்ல திரைப்படம் காண வேண்டும் என்பவர்கள் தவறாமல் இதை பார்க்க வேண்டும்

by எஸ். ராமகிருஷ்ணன்
http://www.sramakrishnan.com

Advertisements
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: